<$BlogRSDUrl$>

Monday, June 21, 2004

ஜெர்மனி, சிம்ரன், ஆளவந்தான், இந்தியா.........


ஜெர்மனியில் இப்போதெல்லாம் அடிக்கடி இந்தியா பற்றிய பேச்சு கேட்கிறது. இந்தியா பற்றிய முழுமையான , தெளிவான கருத்து இல்லையென்றாலும் உலக அளவில் பெரும்பான்மையான நாடுகளில் இதுபோல் இந்தியா பற்றியும் , இந்தியத் திரைப்படங்கள் பற்றியும் பேசப்படுவது ஒரு மைல் கல்லே என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் பெரும்பாலோர் பசியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்றே பலர் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சரி.. அது போகட்டும்.

சில நாட்களுக்கு முன் கமலின் ஆளவந்தான்(இந்தி) திரைப்படத்தை தொலைக்காட்சியில் காட்டினார்கள். இன்னொரு நாள் திடீரென சிம்ரனின் பேட்டியைக் காட்டி திகைக்க வைத்தார்கள். அவ்வப்போது நம்மூர் சக்தி மசாலா விளம்பரம்போல "மதராஸ் கறிமசாலா" சுவைத்துப் பாருங்கள் என்று ஒரு விளம்பரமும் வருகிறது. எல்லாம் ஜெர்மன் மொழியில்தான்.

சில நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி இருவர் கோமாளிகள் போல ஒருவர் ஏதாவது கேள்வி கேட்டு மற்றொருவர் பதில் சொல்வார். சன் டிவியிலோ அல்லது ராஜ் டிவியிலோ " அரி, கொரி.. " என்பது போல ஒரு நிகழ்ச்சி உண்டே அதுபோலத்தான். பெரும்பாலும் நகைச்சுவையைச் சார்ந்தே இருக்கும். அதில் வந்த ஒன்று.

".... இந்தியாவின் முக்கிய மொழிகளில் சிலவற்றைச் சொல்லு பார்க்கலாம்.."

"... ஆங்கிலம் , இந்தி, ம்ம்ம்ம் .. அப்புறம் எச்.டி.எம்.எல் . ..."
(4) Your Comments | | | |

Saturday, June 19, 2004

கமிட்டியின் ஆய்வு முடிவு


அடிக்கடி நம்மூருக்காரங்களைக் கிண்டலடிச்சு நாமே ஜோக் சொல்வதைக் கேட்டிருக்கலாம். இது எல்லா நாட்டுக்கும் பொதுவானதுதான் போலிருக்கு. நேற்று ஜெர்மன் நண்பர் ஒருவர் இந்த ஜோக்கைச் சொன்னார்.

தொடர்ச்சியாய் ஜெர்மனியும் , ஜப்பானும் பல படகுப்போட்டிகளில் பங்கு பெற்றது. அனைத்திலும் ஜப்பானே எளிதாய் வென்றுவிட்டது. ஜெர்மனியின் தோல்வியை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு கொடுத்த அறிக்கை இது.

"...ஜப்பான் அணியில் உள்ள ஒன்பது பேரில் எட்டுப் பேர் துடுப்புப் போடுகிறார்கள், ஒருவர் துடுப்பை எப்படிப் போடுவது என்று யோசனை சொல்கிறார். ஆனால் ஜெர்மன் அணியில் ஒரே ஒரு நபர் மட்டும் துடுப்புப் போடுகிறார் மற்ற எட்டுப் பேரும் அவருக்கு ஆலோசனை சொல்கிறார்கள். இது நமது ஜெர்மனி அணியின் படுதோல்விக்கான ஒரு காரணமாக இருக்கலாம் என்று இக்குழு நினைக்கிறது...."
(1) Your Comments | | | |

Friday, June 18, 2004

ரீடிஃப் மின்னஞ்சலும் மாறியாச்சு.. !


இது ஒன்றும் அவ்வளவு சுவாரசியமான விஷயமாய் இல்லை (இப்போது). ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கிணங்க ரீடிஃப் தனது மின்னஞ்சல் சேவை 200 மடங்கு பெரியதாய் மாற்றியுள்ளது. அதாவது 5 MB யில் இருந்து 1000 MB ஆக மாற்றியுள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான் எனது நண்பனொருவன் வருடத்து 25 டாலர் பணம் கட்டி 25 MB யாகூ மின்னஞ்சல் கணக்கு வாங்கினான். இதுபோல் இனிமேல் யாரும் காசு கொடுத்து மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை வராது என்றே தோன்றுகிறது. இன்று தற்செயலாய் ரீடிஃப் மின்னஞ்சலில் நுழைந்தபோதுதான் இது தெரிந்தது. பார்க்கலாம் ஹாட் மெயில் என்ன செய்யப் போகிறார்கள் என்று.

இத்தகைய அரும்பெரும் சேவை செய்யும் ரீடிஃப் மின்னஞ்சலும் வாழ்க.. வாழ்க... வாழ்க... என வாழ்த்துகிறேன் என்பதை சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் என்று ........... ;)
(0) Your Comments | | | |

Wednesday, June 16, 2004

வைரஸ் வரலாற்றில் முதல்முறையாக ..!


தினமும் ஒரு புது வைரஸ் வந்துகொண்டிருப்பது நமக்கு ஒன்றும் புதிதில்லை. ஆனால் புதிதாய் இப்போது கண்டறியப்பட்டுள்ள வைரஸுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. இதுவரையில்லாத தனி ரக வைரஸ் இது. வைரஸ் என்றால் சாதாரணமாய்க் கணினியை மட்டும் தாக்கும்படி இருந்த காலம்போய் விட்டது. கணினியில் இருந்து மொபைல் போனுக்கு வரும்படியாய் இந்த வைரஸ் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறான வகையில் இதுதான் முதல் முதல் வைரஸ். எனவே தங்கள் செல்பேசிக்கு மென்பொருட்களை இணையத்திலிருந்து இறக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஒரு செல்பேசியில் இந்த வைரஸ் தொற்றிக் கொண்டால் பக்கத்தில் உள்ள மற்றொரு செல்பேசிக்கு இது மிக எளிதாய்ப் பரவிவிடும். செல்பேசியில் உள்ள "ப்ளூடூத்" என்ற குறைந்ததூர வயர்லஸ் வசதி அருகில் உள்ள மின்னணு சாதனங்களை செல்பேசியுடன் இணைப்பதற்காய்ப் பயன்படுவது. இந்த வசதியைத்தான் இந்த வைரஸ் பரவ உபயோகப்படுத்துகிறது.

உறுமீன் வருமளவும் வாடி நிற்கும் கொக்காக, பக்கத்தில் தேவையான செல்பேசி வரும்வரை அமைதியாய் இவ்வரஸ் காத்திருந்து அருகாமையில் வந்தவுடன் அந்த செல்பேசிக்குத் தானாகவே பரவும் தன்மை கொண்டது என்பதுதான் இதன் மிகச் சிறப்பான அம்சம். ஜலதோஷம் பிடித்தவருக்கு அருகில் இருப்பவருக்கும் ஜலதோஷம் பரவுவதுபோல இந்த வைரஸ் பரவிவிடும். செல்பேசியில் நுழைந்த உடன் செல்பேசிக்கு மிகத் தேவையான ஒரு கோப்புப்போல தன்னை மாற்றிக் கொண்டுவிடும் என்பதால் இதைக் கண்டறிதும் கொஞ்சம் கடினமான காரியம்தான். இந்த வைரஸ் அந்த அளவுக்கு ஆபத்தானது இல்லை என்றாலும் இது வெறுமனே முதல்முதல் பதிப்புத்தான் என்பதால் பின்னர் வரும் அடுத்தடுத்த பதிப்புகள் வீரியம் கூடியவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வைரஸின் பேரைச் சொல்ல மறந்துவிட்டேனே.. , அன்னாரின் பெயர் கேபிர்(cabir). பெரும்பாலான செல்பேசிகளின் இயங்குதளமான சிம்பியன்(symbian) என்ற இயங்குதளத்தைத் தாக்கும்படி எழுதப்பட்டுள்ளது. கொஞ்சம் நவீனமான செல்பேசிகளை மட்டும்தான் இதுதாக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது. நோக்கியா நிறுவனத்தின் 6600 ஒரு உதாரணம்.

இந்த வைரஸுக்குத் தடுப்பூசி மற்றும் மருந்துகள் தயாரிப்பில் செல்போன் நிறுவனங்கள் மிக மும்முரமாய் இறங்கியுள்ளன.
(3) Your Comments | | | |

Tuesday, June 15, 2004

ஆறு நூறாகிவிட்டது ... !


ஏற்கனவே பேசிக்கொண்டிருந்த விஷயம்தான். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நான் கூட இங்கு எழுதியிருந்தேன். அதாகப்பட்டது யாகூ இலவச மின்னஞ்சல் சேவை 6 MB யில் இருந்து 100 MB ஆக மாறப்போகிறது என்று பேசப்பட்டது உண்மையாகிவிட்டது. ஜூன் 15 ஆம் தேதியில் இருந்து(இன்று) பல யாகூ பயனாளர்களின் கணக்கு 6 MB யில் இருந்து 100 MB ஆக மாறிவிட்டது. ஆனால் அனைவருக்கும் இவ்வாறு மாற்றப்படவில்லை. நான் இன்று காலையில் யாகூவைத் திறந்து பார்த்தபோது இந்த மாற்றம் நடந்து விட்டிருந்தது. பணம் செலுத்தி சேவையைப் பயன்படுத்தும் பயனாளர்களின் மின்னஞ்சல் கணக்கு 1000 MB ஆக மாறியிருக்கிறது. மேலும் இலவச சேவையில் இனிமேல் மிகப் பெரிய கோப்புக்களை இணைப்பாக அனுப்ப இயலும். இதற்கு முன்னால் 1 MB க்கு மேற்பட்ட கோப்புகளை அட்டாச்மெண்டாக அனுப்ப இயலாது, அந்த மின்னஞ்சல் இணைப்பின் உச்ச அளவு 10 MB ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இங்கே என் நண்பர் ஒருவர் ஆறிலும் மின்னஞ்சல் நூறிலும் மின்னஞ்சல் என்ன பெரிய வித்தியாசம் என்கிறார். ஆனாலும் ஒரு வரி ஹாய் மின்னஞ்சலைக் கூட அழிக்க மனம் வராத பிரின்ஸஸ் பவித்ரா, நான் போன்ற ஜீவன்களுக்கு இது மிக உபயோகமாய் இருக்குமென்பதில் சந்தேகமில்லை .


(6) Your Comments | | | |

Saturday, June 12, 2004

நெஞ்சு பொறுக்குதில்லையே ... !


பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அவற்றில் மிக மோசமான வழி ஒன்றினை இங்கு காண நேர்ந்தது. பொதுவாக ஜெர்மனியில் தான், தனது என்று இருக்கும் மக்களுடன் அடுத்தவருக்கு உதவும் எண்ணமுடைய நல்ல நெஞ்சங்களும் இருக்கிறார்கள். இவர்களின் நல்லெண்ணத்தைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க எண்ணி சிலர் செயல்பட்டு வருவது வருந்தத்தக்க ஒன்றாகும்.

சில நாட்களுக்கு முன்னர் இங்கு ஒரு பிட் நோட்டீஸை நண்பர் ஒருவர் காட்டினார். அந்த விளம்பரத்தின் சாராம்சம் இதுதான்..

" ..... 50 யூரோ கொடுத்து உதவுங்கள். இந்தியாவில் தமிழ்நாட்டின் தென்பகுதியில் நடந்து வரும் கொடுமைகளைத் தவிர்க்க, துயர் தீர்க்க பணம் கொடுத்து உதவுங்கள். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உயர்சாதிக்காரர்களின் கொடுமைகள் மிக அதிகம். இதனால் தாழ்ந்த சாதிக்காரர்கள் மிகப்பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தக் கொடுமைகளை எதிர்த்துப் போராட, தாழ்ந்த சாதிக்காரர்களுக்கு வீடு மற்றும் வசதிகள் செய்து கொடுக்க 50 யூரோ கொடுத்து உதவுங்கள்...."

இவ்வாறாகச் செய்யப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் லட்சக்கணக்கான பணத்துக்காகச் சிலர் நாட்டின் பெயரைச் சீரழித்து வருகிறார்கள். சொந்த நாட்டைப் பற்றியே ஒரு பொய்யான தோற்றத்தைப் பணத்துக்காக மக்களிடம் உருவாக்கிவருகிறார்கள். இது போன்று போலி விளம்பரங்கள் செய்து லட்சக்கணக்கான பணம் சுருட்டும் கும்பல்கள் பல திண்டுக்கல் பகுதியில் செயல்பட்டு வருவதாய் அந்த நணபர் வருத்தத்துடன் சொன்னார். இவர்களை எல்லாம் என்ன செய்வது... ?
(2) Your Comments | | | |

Saturday, June 05, 2004

வேரும் , மொழியும் ... !


சில நாட்களுக்கு முன்னர் ஜார்ஜிய நண்பரொருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது சில தகவல்கள் கிடைத்தன.

நான், "....உங்கள் நாட்டில் என்ன மொழி பேசுவீர்கள்.. ? ஆங்கிலமா..? "

".. ஆங்கிலமா..? ஜார்ஜியாவின் மொழி ஜார்ஜியன் . உங்களுக்குத் தெரியுமா..? எங்கள் மொழி உலகின் தொன்மையான மொழிகளுள் ஒன்று. .. ஆனால் கிரீக், லத்தீன் அளவுக்கு மற்றவர்களிடம் பிரபலம் அடையவில்லை. ஏனென்றால் அந்தளவுக்கு மொழியை எங்கள் நாட்டில் இருந்தவர்கள் முன்னெடுத்துச் செல்லவில்லை..." என்றார் ஆதங்கத்தோடு.

தொடர்ந்து அவரே சொன்னார், "...ஜார்ஜியாவின் வரலாறு ரோமின் வரலாறு போலவே பழமையானது. ஜார்ஜியா ஒரு நாடாகப் பிரபலமாக இருந்த காலத்தில் ரோம் பிரபலமான நகரமாக இருந்தது. ..., இன்றைக்குக் கிட்டத்தட்ட சிங்கப்பூர் எப்படி இருக்கிறதோ அதுபோல அன்று ரோம் இருந்தது.., ஜார்ஜிய மொழியும் லத்தீன் , கிரீக் போன்றவற்றைப் போலவே தனித்தன்மை வாய்ந்தது..." , என்று சொல்லிவிட்டுத் திரும்பக் கேட்டார்,"...நீங்கள் என்ன மொழி பேசுவீர்கள் ..? "

".... நான் பேசும் மொழி தமிழ். உலகில் வழக்கிலுள்ள ஓரிரு செம்மொழிகளுள் ஒன்று... "

" ... ஓ .. அப்படியா..? , எனக்கு இந்திய மொழிகளைப் பற்றிக் கொஞ்சம் தெரியும். ஐரோப்பிய மொழிகளின் நிறையச் சொற்களை இந்திய மொழிகளில் காணமுடியும், ஏனெனில் அவை ஐரோப்பியமொழிகளின் கலப்பினால் உருவானவை..."

எனக்கு அவர் சொன்னதில் முழுவதும் உடன்பாடில்லை. எனவே என்னுடைய கருத்தைச் சொன்னேன்.

"... நீங்கள் சொன்னதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. ஆனால் முழுவதும் உண்மை இல்லை. இந்திய மொழிகளில் இந்தோ-ஐரோப்பிய மொழிகள், திராவிட மொழிகள் என இரு பிரிவுகள் உண்டு. இந்தோ-ஐரோப்பிய வகையைச் சார்ந்த சமஸ்கிருதத்தை வேராகக் கொண்டவற்றில் ஐரோப்பிய மொழிகளின் நிறையச் சொற்களைக் காண இயலும்.., ஆனால் திராவிட மொழிப் பிரிவைச் சார்ந்த தமிழில் ஐரோப்பிய மொழிகளின் சொற்கள் இல்லையென்றே சொல்லலாம். தமிழை வேராகக் கொண்ட பிற திராவிட மொழிகளில் காணப்படும் ஐரோப்பிய மொழிச்சொற்களும்கூட சமஸ்கிருத மொழித்தாக்கத்தால் வந்தவையே...."

கொஞ்சம் ஆச்சரியத்துடன் கேட்டார்,
"... இந்தியாவிலுள்ள இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழைப் பற்றி அந்தளவுக்குக் கேள்விப்படவில்லையே.."

சில வினாடி மவுனத்துக்குப் பின்னர் அவர் முன்னர் எனக்குச் சொன்ன பதிலையே திரும்பச் சொன்னேன்.

"...தமிழ் மொழி உலகின் தொன்மையான தனித்தன்மை வாய்ந்த மொழிகளுள் ஒன்று. .. ஆனால் கிரீக், லத்தீன் அளவுக்கு மற்றவர்களிடம் பிரபலம் அடையவில்லை. ஏனென்றால் அந்தளவுக்கு மொழியை எங்கள் நாட்டில் இருந்தவர்கள் மற்றவர்களிடம் முன்னெடுத்துச் செல்லவில்லை..." என்றேன் ஆதங்கத்தோடு.(0) Your Comments | | | |

Friday, June 04, 2004

கணினியுடன் செஸ் விளையாட்டு .. !


சிலநாட்களாய் winboard என்ற புரோகிராமுடன் செஸ் விளையாட்டு விளையாடிவருகிறேன் .. நியாயமான முறையில் அந்தப் புராகிராமை ஒரு தடவையாவது வெல்ல ஆசை.. அந்தப் புராகிராம் அநியாயத்துக்கு விளையாடுகிறது .. நண்பர் ஒருவரிடம் இதைப் பற்றிச் சொல்ல அவர் சில நாட்களில் இதுவரை 50 தடவைக்குமேல் விளையாடியிருக்கிறார். ஆனால் ஒரு தடவைகூட வெல்ல முடியவில்லை.. ஜெயிப்பது இரண்டாவது விஷயம் .. அதிக நேரம் தாக்குப் பிடிப்பதே பெரிய கஷ்டமாய் இருக்கிறது.. ஒரு காயை நாம் நகர்த்தினால் அது 15 நகர்த்தல்கள் வரை யோசித்து நகர்த்துகிறது. அதை எப்படி வெல்வது என்று கூகிளில் தேடிப் பார்த்தபோது சில குறுக்கு வழிகள் கிடைத்தன. அப்படி இப்படி "தகிடு தத்தங்கள்" செய்து புரோகிராமை ஏமாற்றி ஒரு தடவை ஜெயித்துவிட்டேன். இனிமேல் அவ்வப்போது நண்பர்களிடம் பெருமையாய் சொல்லிக்கொள்ளலாம், ஒரு தடவை கம்ப்பூட்டரையே செஸ் விளையாட்டில் ஜெயித்திருக்கிறேன் என்று. :) ;)
(0) Your Comments | | | |

Thursday, June 03, 2004

புதியதாய் இன்னும் ஒரு ஜிபி மின்னஞ்சல் ...


நேற்று தற்செயலாய் சேரலாதன் வலைப்பதிவைப் பார்த்தேன். மூன்று மாதங்கள் கழித்து அங்கு அவர் இட்டிருந்த இடுகை சிலருக்குப் பயனுடையதாய் இருக்கலாம். புதியதாய் ஒரு இணையத்தளம் தரும் மின்னஞ்சல் வசதியைப் பற்றியது அது.

ஜிமெயில் தனது ஒரு ஜிபி மின்னஞ்சல் வசதியைச் சோதனை முறையில் செய்து கொண்டிருக்கிறது. யாகூ விரைவில் 4 MB மின்னஞ்சல் கணக்கை 100 MB ஆக மாற்றப் போகிறதாம். இது நமக்குத் தெரிந்ததுதான். இதுதவிர புதிதாய் ஸ்பைமக் என்ற இணையத்தளம் 1 GB மின்னஞ்சல் வசதியைத் தருகிறது. அத்துடன் இலவசமாய் அதிகமான இணையத்தள வசதி, வலைப்பதிவு வசதி எனச் சிலவற்றையும் சேர்த்தே தருகிறது. இரு ஜிமெயில்கள், சில பல யாகூ, ரெடிப், மெயில்சிடி, இத்யாதிகள் போதாதென்று ஸ்பைமக்கிலும் நேற்று ஒரு கணக்கை ஆரம்பித்திருக்கிறேன். கொஞ்சம்(?) பெரியதாய் மின்னஞ்சல் கணக்கு வேண்டுமென விருப்பப்படும் நண்பர்கள் அங்கு சென்று ஒரு கணக்கை ஆரம்பித்துக் கொள்ளலாம்.
(0) Your Comments | | | |

Wednesday, June 02, 2004

கல்யாணமாம் கல்யாணம் ... !


திருமணத்தைப் பற்றி வேடிக்கையான பொன்மொழிகளை நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். அவற்றில் சில புன்முறுவலை வரவழைக்கும்படியாய் இருந்தன.

"... மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கை அல்ல .. எனவே திருமணம் செய்து கொள்ளுங்கள் .."

".. ஆர்க்கியாலஜிஸ்ட் ஒரு பெண்ணுக்குக் கணவனாய் வர மிகப் பொருத்தமானவர், ஏனென்றால் அவருக்குத்தான் ஒரு பொருளின் வயது அதிகமாக அதிகமாக அதன் மீது ஆர்வம் கூடிக்கொண்டே இருக்கும்..."

"..பெண்துணை இல்லாத மனிதன் சைக்கிள் இல்லாத மீனுக்கு ஒப்பாவான்.."

"...அன்றுதான் கல்யாணமானவன் சிரித்துக்கொண்டே இருப்பது ஏனென்று எல்லாருக்கும் தெரியும், ஆனால் கல்யாணமாகி பத்து வருடம் ஆன ஒருவன் சிரித்தால் இவன் ஏன் சிரிக்கிறான் என்று எல்லாரும் ஆச்சரியப்படுவார்கள்.."

"..காதலுக்குக் கண் இல்லைதான் ஆனால் திருமணம் கண்ணைத் திறந்து வைக்கும் .. "

இன்னும் திருமணம் ஆகாதவர்கள் இதுபோல் பொன்மொழிகளை இப்போதே படித்து ரசித்து சிரித்துக் கொள்ளவும். :)

பின்குறிப்பு :
பெண்கள் யாரும் இதற்காய் சண்டைக்கு வர வேண்டாம், இதைப் படித்து யாருக்காவது கோபம் வந்தால் அவர்களுக்கு இந்த மின்னஞ்சலை எனக்கு அனுப்பியவரின் முகவரியைத் தருகிறேன் ... :)
(0) Your Comments | | | |

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com