<$BlogRSDUrl$>

Monday, February 13, 2006

நம் சிந்தனை எந்த மொழி?

வாழ்வில் நாம் பல மொழிகளைக் கற்க வாய்ப்புக் கிடைக்கலாம். பல மொழிகளை சரளமாகப் பேசலாம். ஆனால் நமக்கு அவசரத்தில் சரளமாக வருவது முதலில் கற்ற தாய்மொழியே. டோண்டு இன்று இதுபற்றி ஒரு பதிவு இட்டுள்ளார். வலி, வேதனை, பயம் ஆகியவை திடீரென வரும்போது வாயில் வருவது தாய்மொழியாகத்தான் இருக்கும். இதனால் நாம் சிந்திப்பதே தாய்மொழியில்தான் என்று கருதுபவர்கள் பலருண்டு. உண்மையில் சிந்தனைக்கு மொழி இல்லை என்றே கூறலாம். மொழிகளைக் கடந்த நிலையிலேதான் சிந்தனை பிறக்கிறது. அதைச் சேமிக்கவோ, அடுத்தவருக்குச் சொல்லவோ நமக்கு மொழி என்ற கருவி முக்கியத் தேவை. இதனாலேயே உண்மையில் நாம் எண்ண நினைக்கிறோம் என்பதை அப்படியே நம்மால் பிறருக்கு வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலுவதில்லை. தாய்மொழியில் தோராயமாய் வெளிப்படுத்தலாம், ஆனால் பிறமொழியில் இன்னும் மோசம்.

ஒரு அறிவியல் ஆய்வுக்கட்டுரை சில வருடங்களுக்கு முன்னால் வெளியானது. அதன் முக்கியக் கருத்து "...மொழி நாம் எண்ண நினைக்கிறோம் என்பதை அடுத்தவருக்கு முழுவதுமாகச் சொல்ல உதவுவதில்லை...". சில அறிவியல் சோதனைகள்கூட இது தொடர்பாய் நடந்துவருகின்றன. ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குத் தகவலைக் கடத்துவதுபோல மனிதர்கள் மொழியின் உதவியில்லாமல் தங்கள் எண்ணங்களைத் துளியும் பிசகாமல் துல்லியமாய் அடுத்தவருக்குத் தெரிவிக்க முடியும் என்பதற்குச் சாத்தியங்கள் உள்ளதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன (சிந்தனை---->சிந்தனை).

உங்களைப் போலவே சிந்திக்கும் ஒருவர் உங்களுக்கு நண்பராக இருந்தால் அவரின் ஒரு சொல்கூட அவர் உங்களிடம் என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தெளிவாக உணர்த்தும். நம்மிடையே எத்தனை பேருக்கு அந்த மாதிரியான அனுபவம் உண்டு என்று தெரியவில்லை. காதலர்கள் கண்களால் பேசிக்கொள்வதையும் இங்கே கருத்தில் கொள்ளலாம். இவைகள் கிட்டத்தட்ட மொழிகளில்லா சிந்தனை---->சிந்தனை உயர்பரிமாற்றத்துக்கு அருகில் உள்ளவை.

சிந்தனை என்பது சொற்களில்லாப் பரப்பிலேயே ஆரம்பிக்கிறது. அப்பரப்பிலிருந்து நேரிடையாய் எளிதாய் வரும் சொற்கள் தாய்மொழிச் சொற்களாகவே இருக்கும் (சிந்தனை---->தாய்மொழி). ஒருவர் தாய்மொழியைத் தவிர மற்ற மொழியிலும் சரளமான பயன்பாட்டுத் திறனை உடையவர் என்றால் தனது சிந்தனையை நேரடியாய் அந்த மொழியிலும் தெரிவிக்க இயலும் (சிந்தனை---->பிறமொழி). அவ்வாறு இல்லாதபோது தாய்மொழி மற்ற மொழிகளுக்கு இடைமுகமாய் ஊன்றுகோல் போல நம்மையறியாமல் நின்று உதவும். சாதாரணமாய் நடப்பதற்கும் ஊன்றுகோலூன்றி நடப்பதற்கும் உள்ள வித்தியாசம் நாம் அறிந்ததுதானே?. நம்மிடையே பலர் தாய்மொழியிலுள்ள சரளம் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் வராமைக்குக் காரணம் இதுவேதான். மொழிகளற்ற சிந்தனையிலே இருந்து ஆங்கிலம் நேரடியாய் வரவேண்டும், சிந்தனை---->தாய்மொழி--->பிறமொழி என்று நம்மையறியாமல் கணநேரப் பரிமாற்றம் வரும்போது சரளம் என்றுமே ஒரு குறைதான்.

இதனாலேயே ஜெர்மன் உள்ளிட்ட எந்தப் பிறமொழியையும் கற்பிக்கும் "திறமையான" ஆசிரியர்கள் அதைப் பிறமொழிகளின் உதவியில்லாமல், இடைமுகமில்லாமல் நேரடியாய் அதேமொழியில் கற்பிக்கிறார்கள்.
| | |
Comments:
//ஆனால் நமக்கு அவசரத்தில் சரளமாக வருவது முதலில் கற்ற தாய்மொழியே. டோண்டு இன்று இதுபற்றி ஒரு பதிவு இட்டுள்ளார். வலி, வேதனை, பயம் ஆகியவை திடீரென வரும்போது வாயில் வருவது தாய்மொழியாகத்தான் இருக்கும். இதனால் நாம் சிந்திப்பதே தாய்மொழியில்தான் என்று கருதுபவர்கள் பலருண்டு//


எனக் என்னவோ இது ஒண்றும் இலகுவாக சொல்லக் கூடிய விடையமாகத் தெரியவில்லை!!
மூளையின் செயல்பாடு பழக்கப்படுத்தப்பட்ட/தினிக்கப்பட்ட விதத்தில் செயல்படும் என்றே நான் நினைக்கிறேன்
உ+ம் 1. ஒருத்தர் ஒரு மொழியின் ஊடாக பட்ட முதல் அனுபவத்தை, அதே அனுபவத்தை சில காலத்துக்குபின் மறு மொழியிலும் படும்போது அவருடைய மூளைக்கு எந்த மொழியில் முதலில் பதிவானதோ அதே மொழியில் தான் இரண்டாவது அனுபவத்தை உணருவார் என நான் கருதுகிறேன்!! இந்த அனுபவத்தை முதலில் தாய் மொழியில் உணர்ந்தால் அது தாய் மொழியாய் இருக்கும்! இல்லாவிடின் அது வேற்று மொழியாக இருக்கும்!!!
 

//சிந்தனை---->தாய்மொழி--->பிறமொழி என்று நம்மையறியாமல் கணநேரப் பரிமாற்றம் வரும்போது சரளம் என்றுமே ஒரு குறைதான்.//
நல்ல கருத்து..பலமுறை யோசித்து பிடிபட்டும் பிடிபடாமல் இருந்தது எனக்கு.சரியாக சொன்னீர்கள்.
 

"இதனாலேயே ஜெர்மன் உள்ளிட்ட எந்தப் பிறமொழியையும் கற்பிக்கும் "திறமையான" ஆசிரியர்கள் அதைப் பிறமொழிகளின் உதவியில்லாமல், இடைமுகமில்லாமல் நேரடியாய் அதேமொழியில் கற்பிக்கிறார்கள்."
ஆயிரத்தில் ஒரு வார்த்தை. இம்முறையாலேயே நான் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளைச் சிறப்பாகக் கற்க முடிந்தது. இம்முறையை அனுசரிக்காது கேனத்தனமாக "Italian for forigners" என்ற அமெரிக்காவில் வெளியான புத்தகத்தை வைத்துக் கொண்டு தில்லியில் உள்ள இத்தாலிய கல்விக் கழகம் எங்களுக்கு சொல்லிக் கொடுக்க முயல, இன்றளவும் என்னால் இத்தாலிய மொழியில் சரளம் பெற முடியவில்லை. ரஷ்ய மொழி கற்றதும் அதே போல தோல்வியில் முடிந்தது.

இப்பின்னூட்டத்தை என் உருது இடாலிக்ஸ் அனுபவம் பற்றியப் பதிவில் பினூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/italics.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

ஒலியினிலே,
உங்கள் கருத்துக்கு நன்றி. மூளையில் பதிவாகியிருப்பது தகவல்கள் மட்டுமே. அதற்கு மொழியில்லை என்றே நினைக்கிறேன். அதை பிறருக்குத் தெரிவிக்க நமக்கு மொழி தேவை. பலரால் தாம் என்ன நினைக்கிறோம் என்பதை அடுத்தவருக்குச் சரியாக புரியவைக்க முடியாமல், தெரியவைக்க முடியாமல் போவதற்கு மொழித்திறனில் உள்ள குறை ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.
 

முத்து,
நல்ல கட்டுரை. நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிவிய கட்டுறைக்கு சுட்டி இருந்தால் கொடுங்களேன்.

//நம்மிடையே பலர் தாய்மொழியிலுள்ள சரளம் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் வராமைக்குக் காரணம் இதுவேதான். மொழிகளற்ற சிந்தனையிலே இருந்து ஆங்கிலம் நேரடியாய் வரவேண்டும், சிந்தனை---->தாய்மொழி--->பிறமொழி என்று நம்மையறியாமல் கணநேரப் பரிமாற்றம் வரும்போது சரளம் என்றுமே ஒரு குறைதான்.//

இதில் தாய்மொழி என்பதைவிட என்னென்ன விஷயங்களை எந்தெந்த மொழியில் கற்றுக்கொண்டோமோ அம்மொழிகளிலேயே அவ்விஷய்னக்களைக் குறித்தும் தெளிவாக சிந்திக்கவும், வெளிப்படுத்தவும் முடிகிறது. எனக்கு வீட்டு விஷய்ங்களை தமிழைவிட தெளிவாக தெலுங்கில் சொல்ல முடியும் (உச்சரிப்பைக் கேட்டால் ஆந்திராகாரன் அடிக்கவருவான் என்றாலும்), தமிழ்நாடு/இந்தியா சார்ந்த அரசியல் கலாச்சார விஷயங்களை தமிழில் மிகத்தெளிவாகவும், அறிவியல் மற்றும் பிற உலக விஷயங்களை தமிழைவிட சிறப்பாக ஆங்கிலத்திலும் சிந்திக்கவும், வெளிப்படுத்தவும் முடிகிறது. இந்த மூன்று பிரிவுகளில் ஏதவதொன்றை சொல்லவேண்டுமென்றால், முதலில் கற்றுக்கொண்ட மொழியில் சிந்தித்து, மனதுக்குள்ளேயே மொழிமாற்றி பிறகு தான் சொல்ல இயலும். அப்படி செய்யும்போது சரளம் குறைவது மட்டுமல்ல சில நேரங்களில் சிக்கலிலும் மாட்டிவிடும்.
 

முத்து,
ஒரு மொழியில் தட்டி இன்னொரு மொழிக்கு மாற்றுவது கூட சிக்கலில் மாட்டிவிடும். தமிழ் எழுத்துருக்கள் இல்லாமல் சுரதாவில் தட்டி, மாற்றி, ஒத்தி ஒட்டியதில் எத்தனை பிழைகள் என்று பாருங்கள். சிந்தித்ததை அப்படியே மண்டையிலிருந்து நேரடியாக பின்னூட்டப் பெட்டிக்கு அனுப்ப விரைவில் ஏதாவது தொழில்நுட்பம் வரக்கூடாதா?
 

முத்து(தமிழினி),
உங்கள் மறுமொழிக்கு நன்றி.
 

டோண்டு,
உங்களின் கருத்துக்கு நன்றி. நம்மூரில் பலர் பல வருடங்களாய் ஆங்கிலத்தைக் கற்று உபயோகித்துக்கொண்டிருந்தாலும் சரளம் வராததற்குக் காரணம் தாய்மொழி மூலம் அதைக் கற்பதுதான் என்று நம்புகிறேன்.
 

//// நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிவிய கட்டுறைக்கு சுட்டி இருந்தால் கொடுங்களேன்.////
சுந்தரமூர்த்தி,
நன்றி. இக்கட்டுரையை எழுதும்போதே அந்தச் சுட்டியைக் கொடுக்கக் கூகிளில் தேடினேன். எனக்கு அகப்படவில்லை. newscientist - ல் வந்தது என்று நினைக்கிறேன், (science or nature ஆகவும் இருக்கலாம்). "...language is not the best way to express thoughts.." என்பதுபோல் அதன் தலைப்பு இருந்ததாய் ஞாபகம்.
 

///இதில் தாய்மொழி என்பதைவிட என்னென்ன விஷயங்களை எந்தெந்த மொழியில் கற்றுக்கொண்டோமோ அம்மொழிகளிலேயே அவ்விஷய்னக்களைக் குறித்தும் தெளிவாக சிந்திக்கவும், வெளிப்படுத்தவும் முடிகிறது.////

சுந்தரமூர்த்தி,
மிக உண்மை. மேலும் தாய்மொழி என்றால் என்னவென்று எதிர்காலத்தில் நாம் மீண்டும் வரையறுக்க வேண்டிய நிலையும் வரலாம். புலம் பெயர்ந்தவர்களின் குழந்தைகள் பெற்றோரின் தாய்மொழியைவிட இருக்கும் நாட்டின்/இடத்தின் மொழியைப் பயன்படுத்துவை எளிதாக உண்ர்வார்கள். மேலும், பல ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொல் என்னவென்று தேடினால் சில சமயம் மணிக்கணக்கில் நமக்கு நேரமாகும் என்பது வேறு விஷயம்.

//// சிந்தித்ததை அப்படியே மண்டையிலிருந்து நேரடியாக பின்னூட்டப் பெட்டிக்கு அனுப்ப விரைவில் ஏதாவது தொழில்நுட்பம் வரக்கூடாதா?///

வந்தால் வலைப்பதிய எனக்கும் சவுகரியமாக இருக்கும். எதற்கும் நம்ம சுரதாவிடம் சொல்லி வைக்கலாம் :-).
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com