<$BlogRSDUrl$>

Monday, May 15, 2006

மகளிர், ஆடவர் விடுதிகள்

எங்களின் பல்கலைக்கழக மகளிர், ஆடவர் விடுதிக்கும், அங்கிருப்போருக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும் பல வேறுபாடுகளும் இருந்தன என்பது கண்கூடு. இங்க நம்ம விடுதியில் 'தம்' ரொம்ப சாதாரண விஷயம், அப்பப்ப பீர் அடிக்கும் பசங்களும் கணிசமான அளவிலேயே இருந்தார்கள். இப்படியான பசங்களைப் பார்த்து பொண்ணுங்க யாரும் பெரிதாய்ப் பயப்படமாட்டாங்க, இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்.

ஆண்கள் விடுதியில் இருந்த சுதந்திரம் அங்கே பெண்களுக்கு இல்லை என்பது (பசங்களுக்குக்) கொஞ்சம் வருத்தமான விசயம்தான், அதேஅளவுக்கு அங்கிருந்த மகளிரும் வருத்தப்பட்டிருக்கக்கூடும் என்றே நினைக்கிறேன். இங்கே ஆண்கள் விடுதியில் பெரிதாய் எந்தக் கட்டுப்பாடும் இல்லை, எப்பவும் வரலாம் போகலாம், யாரும் வரலாம் போகலாம். ஆனால், பெண்கள் 8 மணிக்குள் அவர்கள் விடுதிக்கு வந்தாக வேண்டும், தாமதமானால் காரணம் சொல்ல வேண்டும்.

எங்கள் விடுதிக்குள், அறைகளுக்கும்கூடத் தோழியர் வரலாம்(எல்லாம் சமத்துவம், சுதந்திரம் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கைதான் காரணம், வேறென்ன?) . ஆனால், பெண்கள் விடுதிக்குள் செல்ல மட்டும் எங்களுக்கு அனுமதி இல்லை(இந்த உலகத்தில் என்ன ஒரு பாரபட்சம் பாருங்கள்). இருந்தாலும் இதையல்லாம் பொறுத்துக்கொண்டுத்தான் எம்மக்கள் அடிக்கடி அங்கு சென்று வெளியில் இருந்தபடியே வெளியே வரச்சொல்லி நோட்ஸ், புத்தகங்கள் இன்ன பிறவற்றை வாங்கிக்கொண்டு வருவார்கள். அவ்வாறு வாங்கித் திரும்பும் முன்னர், சைக்கிள்கள் வரிசை வரிசையாய் நிற்கும் அந்த விடுதியின் வாசலுக்கு அருகில் நின்றுகொண்டு உலகின் மிகமுக்கியமான பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து பலசமயம் மணிக்கணக்கில் இருபாலரும் விவாதிப்பது என்பது வழமையான விஷயம்.

உரையாடல் நடந்துகொண்டிக்கும்போது அந்த வழியாய் எம்மக்கள் யாராவது கடந்து சென்றால் பல சுவாரசியச் சம்பவங்களைக் காணமுடியும். அன்று நான் பார்த்த ஒன்றைச் சொல்கிறேன். எனது நண்பர்களும், சில தோழியரும் அங்கே நின்றுகொண்டிருந்தபோது, அந்தச் சாலையின் வழியாய் சைக்கிளில் ஒரு பையன் வந்தார். அந்தப் பக்கம் யாரோ வருவதைக் கவனித்த தோழியர் அவர்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். அவர்கள் சிரிக்கும் காரணம் கேட்டேன். '.. கொஞ்சம் பொறு, உனக்கே புரியும்..' என்று கோரஸாகப் பதில் வந்தது. சைக்கிளில் போனவர் சரியாய் எங்களைக் கடக்கும்போது ஹேண்ட் பாரில் இருந்து இருகைகளையும் எடுத்து ரஜினி ஸ்டைலில் தலையைக் கோதிவிட்டுக்கொண்டே ஓரக்கண்னால் பார்த்தபடி ஸ்டைலாய்க் கடந்துசென்றார். அதே சமயம் மெல்லிய குரலில் அம்மணிகளிடமிருந்து பல கமெண்டுகள் பறந்தன.

'.. டேய்.. டேய்.. போடா.. உன்னை மாதிரி பந்தா காட்டுறவன் எத்தனை பேரை நாங்க தினம் தினம் பார்க்கிறோம்..' என்பது நான் கேட்ட, இப்போது வரை நன்றாய் எனக்கு நினைவிருக்கும் கமெண்டுகளில் ஒன்று. சைக்கிளில் போன அப்பாவிப் பையனுக்கு
இதில் எதுவும் கேட்டிருக்க வாய்ப்பே இல்லை. அன்று எனக்குப் பலவிஷயங்கள் புரிந்தன. அன்றிலிருந்து கூட்டமாய் நிற்கும் அம்மணியரை கடந்துசெல்லும்போது என் நண்பர்கள் சிலர் ஓரக்கண்ணால் திரும்பிப் பார்க்கக்கூடத் தயங்க ஆரம்பித்தார்கள். அதற்கு முன்னால்கூட நான் அப்படித்தானுங்க, அதனால் என்னிடத்தில் பெரிதாய் எந்த மாற்றமும் இல்லை :-)
| | |
Comments:
நல்லாயிருக்கிறது.
 

சந்திரவதனா,
மறுமொழிக்கு நன்றி. நீங்க உங்க ஊரில் படித்தபோதும் இதுமாதிரியெல்லாம் நடந்திருக்கும்தானே.
 

:-)
 

good one.
 

இது என்ன, கல்லூரி விடுதியில் எப்படி இருக்கவேண்டும் வகுப்பா?

எங்க ஊரில் பள்ளிகள் எல்லாம் லீவு விட்டு விட்டார்கள், தமிழ்மணத்தில் வகுப்புகள் வாரமாகிவிட்டது :)
 

மறுமொழிக்கு நன்றி தீபக்.
 

//இது என்ன, கல்லூரி விடுதியில் எப்படி இருக்கவேண்டும் வகுப்பா?
எங்க ஊரில் பள்ளிகள் எல்லாம் லீவு விட்டு விட்டார்கள், தமிழ்மணத்தில் வகுப்புகள் வாரமாகிவிட்டது :)//

பொன்ஸ்,
கல்லூரி விடுதியில் எப்படி இருக்க வேண்டும் என்ற வகுப்பு இல்லை, (அப்படி ஒரு வகுப்பு எடுத்தால் யாராவது அந்தப் பக்கம் தலைவைத்துப் படுப்பர்களா?). இது கொஞ்ச வருடங்களுக்கு முன்னால் எங்களின் விடுதிகள் எப்படியிருந்தன என்பது மற்றி ஒரு சின்ன மலரும் நினைவுப் பதிவு அவ்வளவுதான். உங்க ஹாஸ்டலெல்லாம் எப்படி ?.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com