<$BlogRSDUrl$>

Tuesday, March 21, 2006

பாரதியாரும் நானும்

நான் படித்த பெரும்பாலான புத்தகங்கள் 15 வயதுக்குள் படித்தவையாகத்தான் இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி வருவதுண்டு. எனக்கு எழுதப்படிக்கத் தெரிந்ததிலிருந்து பதினாறு பதினேழு வயது வரை புத்தகங்கள் மீது அப்படி ஒரு பைத்தியம். எங்கள் ஊரில் நூலகம் என்று எதுவும் இல்லை. ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருந்த அந்தப் பக்கத்து ஊர் நூலகம் உலகிலேயே மிகப்பிடித்தமான இடங்களுள் ஒன்றாக அந்த வயதில் இருந்தது (அந்த வயதில் உலகில் வேறு எந்த இடத்துக்குப் போயிருக்கிறாய் என்று யாரும் தயவு செய்துகேட்காதீர்கள்).

முதன்முதலில் அந்த நூலகத்துக்குப் போகும்போது எனக்கு ஒரு எட்டு வயதிருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வயதில் அந்த நூலகம் மீது அப்படி ஒரு ஈர்ப்பு எப்படி வந்ததோ தெரியவில்லை. அன்றைக்கு அந்த நூலகத்தில் இருந்த புத்தகங்கள் ஆறாயிரத்துக்கும் குறைவாய் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். என்றாவது ஒருநாள் அங்குள்ள அத்தனை புத்தகத்தையும் படித்துவிட வேண்டும் என்பதே அந்தக்காலத்திய லட்சியமாய் இருந்தது. ஆனால் முடியவில்லை :-(. எப்படியும் ஒரு ஆயிரத்தைத் தாண்டியிருப்பேன் என்று நினைக்கிறேன். எனக்குக் கிடைத்த பெரிய அதிர்ஷ்டங்களுள் ஒன்றாய் அந்த நூலக அறிமுகம் கிடைத்ததைக் கருதுவேன். பையன் பாடப்புத்தகத்தைப் படிக்காமல் இப்படி உருப்படாமல் கதைப் புத்தகங்களைப் படிக்கிறானே என்று வீட்டில் அம்மாவிடம் வாங்கிய திட்டுகளுக்குக் கணக்கே இல்லை. பக்கவீட்டுப் பையன்களுடன் விளையாடும் எனது தம்பிகளுக்கு அதற்காய் அவ்வளவாய்த் திட்டுகிடைத்ததேயில்லை, புத்தகம் படித்த எனக்கு மட்டும்தான் எதிர்ப்பு. விடுமுறையாய் இருந்தால் சாப்பிடும் நேரத்தில் மட்டுமே என்னை வீட்டில் பார்க்க முடியும், எப்படியாவது வீட்டில் அனைவருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு நைஸாய் நழுவிவிடுவது அப்போது எனக்குக் கைவந்தகலை.

எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் முழுமையாக வாசிக்காமல் விடுவதில்லை என்பது அன்று பழக்கமாகவே இருந்தது. அந்த வயதில் சில புத்தகங்களைப் படித்தபோது மிகவிநோதமாகத் தோன்றும், பாரதியாரின் கண்ணன் பாட்டு அதில் ஒன்று, பாரதியார் ஏன் இப்படிக் கொஞ்சமும் அர்த்தமில்லாமல் எழுதியிருக்கிறார், நாம் எழுதியிருந்தால் இதைக் கொஞ்சம் நன்றாய் எழுதியிருப்போமே என்று அந்தப் பன்னிரண்டு வயதில் நினைத்ததுண்டு, (யாரும் டென்சனாகிவிடாதீர்கள், சின்னப்பையன்தானே மன்னித்துவிட்டுவிடுங்கள் :-) ). நான் முதன்முதலாய்க் கவிதை எழுதியபோது பத்து வயதிருக்கும் என்று நினைக்கிறேன், (யாரும் வெண்பா, வஞ்சிப்பா வகையாய் இருந்திருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள், "புதுக்கவிதை"தான், அந்த வயதில் எனக்கே அது வெகுசுமாரான ஒன்றாய்த்தான் தெரிந்தது, அந்தக் காகிதமெல்லாம் இப்போது எங்கே போனதோ தெரியவில்லை).

இன்றைக்கு வலைப்பூவில் ஏதோ நாலு வரி தமிழில் எழுதமுடிகிறது என்றால் அதற்கு அந்த வயதில் படித்த புத்தகங்களே காரணம். ஆனால் தமிழ்ப்புத்தகங்கள் என்ற சின்ன வட்டத்துக்குள்ளேயே அன்று நின்றிருந்தது இப்போது நினைத்தால் கொஞ்சம் வருத்தமான விஷயமாய்த்தான் இப்போது தோன்றுகிறது.
| | |
Comments:
uNmaithaan, thamizh puththagangkaL oru vattaththukkuL mudinththu thaan vittathu. ungha thalaippaip paarththa poothu naan baarathiyaarin puththakangkaLaip paRRi ezhuthi irukkiRiirkaL enRu ninaiththeen. ungkaL valai puuvin naayagan anththa nuulagamaaga allavaa irukkiRathu!!! :)

not sure why but unable to type in tamil :( though using http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
 

Poons,
உங்கள் மறுமொழிக்கு நன்றி. தமிழில் எழுத விரும்பினால் எ-கலப்பை அல்லது முரசு நிறுவிக்கொள்ளலாமே, இல்லாவிட்டால் சுரதா மாற்றி http://www.suratha.com/reader.htm அல்லது தகடூர் எழுதியும் http://www.higopi.com/ucedit/Tamil.html பயன்படுத்தலாம்.
 

அன்புள்ள முத்து
நானும் உங்களைப் போலவே சின்ன வயதில் புத்தகங்களைத் தேடிச் சென்றிருக்கிறேன்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பழைய நினைவுகள் வருகிறது.

உங்கள் ஊர்ப் பூனைகளுக்குத் தெரிந்தது, நம் ஊர்ப் பூனைகளுக்குத் தெரிந்தால் என்னாவது?:)))))))))))))))

அன்புடன்
சாம்
 

பாரதி,
அன்றைக்கிருந்தளவுக்கு ஆர்வம் இன்றுவரை இருந்திருந்தால் நான் ஞானியாகவோ அல்லது பைத்தியக்காரனாகவோ ஆகியிருப்பேன் :-). இப்போதும் புத்தகம் படிக்கிறேன், ஆனால் நேரம், சூழ்நிலை என ஏகப்பட்ட காரணிகள் இடையில் வந்துவிடுகின்றன. பள்ளியில் படிக்கும்போதிருந்த பொறுப்புகள் இல்லா, நிறைய நேரம் உடைய, முக்கியமாய்ச் செய்தேயாகவேண்டும் என்ற நிலையில்லா சூழ்நிலை இப்போதும் இராதுதானே.

மறுமொழிக்கு நன்றி பாரதி.
 

மறுமொழிக்கு நன்றி சாம் :-)).
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com