<$BlogRSDUrl$>

Wednesday, January 11, 2006

சறுக்கும் பொம்மையும்

பனிச்சறுக்கு விளையாடுவதைப் பார்த்ததோடு சரி. இதுவரை முயற்சி செய்ததில்லை. சில வாரங்களுக்கு முன்னால் பனியில் சறுக்கிப் பார்க்கலாமே என்று நண்பி, நண்பர்களுடன் ஒரு கும்பலாய் அருகிலுள்ள பனிச்சறுக்குமிடமான ஊபர்ஸ்டோர்ப் என்ற இடத்துக்குப் போனோம். அங்கே போனபின்தான் தெரிந்தது மலையில் ஏறவே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகுமென்று. கொஞ்ச நேரம் ஏறிப் பாதி வழியில் விசாரித்தால் பனிச்சறுக்கும் நேரம் முடியப்போகிறது என்று இறங்கி வந்துகொண்டிருந்த நபர்கள் சொன்னார்கள். பிறகென்ன செய்வது?. நாங்களும் கீழே இறங்கிவிட்டோம். வந்ததற்காய் ஏதாவது செய்யலாமே என்று நினைத்து அடிவாரத்தில் குவிந்துகிடந்த பனிக்குவியலில் அனைவரும் சேர்ந்து ஒரு ஆளுயர பனிப்பொம்மை செய்ய ஆரம்பித்தோம். பெரிய பனிப்பொம்மையைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆன பக்கத்து ரெஸ்டாரெண்ட் ஆளொருவர் எங்களுக்குக் கேரட் தந்து உற்சாகப்படுத்தினார். கேரட் நாங்கள் திங்க இல்லை, பனிம்பொம்மைக்கு மூக்கு வைக்கத்தான். பொம்மையை ஒரு வழியாய் செய்து முடித்து, பொம்மைக்கு எங்களின் தொப்பி, துண்டு எல்லாவற்றையும் போட்டு சுற்றி நின்று புகைப்படம் எடுத்தோம். கிளம்பும்போது மறக்காமல் எங்கள் தொப்பி, துண்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வந்துவிட்டோம்.


புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பது நாங்கள் செய்த பனிப்பொம்மையேதான்.
(2) Your Comments | | | |

காமெடியா? கடினமா ? பரிசு ரூ 10,000,00

காமெடி நிகழ்ச்சியாக நாம் பார்ப்பது நிஜத்தில் நடப்பது சாத்தியமானதுதான். கோடீஸ்வரன் நிகழ்ச்சியை வைத்து பல நகைச்சுவைகள் கேள்விப்பட்டிருக்கலாம். இது நம்மூருக்கு மட்டும்தான் பொருந்தும் என்று நினைத்துவிடாதீர்கள். இத்தாலியில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. நமது கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்கு இணையானது, வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு மில்லியன் யூரோ பரிசு கிடைக்கும். அதில் பல வேடிக்கையான கேள்விகளும், நிகழ்ச்சிகளும் நடப்பது மிக இயற்கை.

அன்று அந்த நிகழ்ச்சியில் அவர் சரியாக சில கேள்விகள் சொல்லி பல ஆயிரம் யூரோ வரை வென்றுவிட்டு அடுத்த கேள்விக்குப் போனார். ஆனால் அடுத்து அப்படி ஒரு கடினமான கேள்வி வரும் என்று அவர் எதிர்பாத்திருக்கமாட்டார். கொடுத்த நான்கு பதில்களில் சரியான பதில் எது எனக்கண்டறிய முடியாமல் திணறிவிட்டார். கடைசியாக ஒரு விசேட வசதியைப் பயன்படுத்தி நண்பர் ஒருவருக்குத் தொலைபேசி சரியான விடை எதுவாக இருக்கும் எனக் கேட்டார். அய்யோ பாவம், அவருக்கும் அது தெரியவில்லை. அது சரி.. இவ்வளவு கடினமான கேள்வியைக் கேட்டால் அவர் என்ன செய்வார்?. அந்தக் கேள்விக்கு மட்டும் சரியான பதிலை யூகித்துச் சொல்லியிருந்தால் இருபதாயிரம் யூரோ பணத்தை அள்ளியிருப்பார். பாவம்..கடைசியில் அவராகவே ரொம்ப யோசித்துத் தவறான பதிலைத் தேர்ந்தெடுத்துவிட்டார்.

நம்மில் பலருக்குச் சரியான விடை தெரிந்திருக்கு வாய்ப்புண்டு.
கேள்வி இதுதான்.
வீட்டுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் ?.
(2) Your Comments | | | |

Monday, January 09, 2006

இந்தியாவில் ராபின் ஹுட் ??

நண்பர் ஒருவர் இத்தாலியில் படிக்கிறார், அவர் நம்ம ஊர்க்காரர்தான். அவரிடம் கதை கேட்டபின் ஐரோப்பாவில் ஒரு பிடித்த இடமாய் இத்தாலி எனக்கு மாறிவிட்டது. சில மாதங்களுக்கு முன்னால் வெனிஸ் போயிருந்ததால் ஒரு முறை நேரடியாய்ப் பார்த்தும் வந்தேன். வெளிநாட்டுக்காரர்கள், வெள்ளைக்காரர்கள் என்றால் மிகவும் வித்தியாசமாய் நடந்துகொள்வர் என்று யாராவது எண்ணினால் இத்தாலி போய் வாருங்கள். எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள்.

கிட்டத்தட்ட இத்தாலி ஒரு மினி இந்தியா, மக்களின் நடவடிக்கைகளில். மக்கள் மிகவும் கனிவாக, உதவும் குணத்துடன் நடந்துகொள்வதாய்ப் பலமுறை நண்பர் சொல்லியிருக்கிறார். இந்தியாவில் எல்லாரும் இப்படியா இருக்கிறார்கள் என்று யாரும் தயவு செய்து கேட்கவேண்டாம் :-). ஒருமுறை அங்கு டெலிபோன் பூத் எங்கு இருக்கிறது என்று கேட்ட அந்த நண்பருக்கு 10 நிமிஷம் கூடவே வந்து டெலிபோன் பூத்தைக் காட்டி, தனது டெலிபோன் கார்டைக்கூட கொடுக்க முன்வந்த இத்தாலியர் ஒரு சின்ன உதாரணம். இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் பெரிய வித்தியாசமாய் மக்களின் நிறத்தைச் சொல்லலாம், அடுத்தத்து பெரும்பாலும் ஆங்கிலம் யாரும் பேசமாட்டார்கள். எந்த ஒரு டிகிரி முடித்தாலும் அவருக்குப் பேர் அங்கே "டாக்டர்", அதுவும் ரொம்பப் பெருமையான விஷயம். அதற்காய் ஊசி போட்டு மருந்து மாத்திரை கொடுக்கும் டாக்டராக முடியாது, அது ஒரு பெயர் அவ்வளவுதான். பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசுபவர்களுக்குக் கிடைக்கும் பதில், "...சாரி.. ஐ ... நோ.. இங்கிலிஸ்". இந்த நோ know இல்லை, இந்த no.

20 வருடம், 30 வருடத்துக்கு முன்னால் இத்தாலி ரொம்பவும் கட்டுப்பெட்டியான நாடு. இங்கே டிஸ்கோத்தே கிளப்கள்கூட ஒரு 15 வருடங்களுக்கு முன்னால்தான் வந்ததாம். ஆணும், பெண்ணும் சகஜமாய்ப் பழகுவதுகூட ஒரு விதக் கட்டுப்பாடுடன்தான் இருந்திருக்கிறது, சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை. இத்தாலியில் ஒரு அரசாங்க அலுவலகத்துக்குப் போய்வந்தால் நம்மூர் கவர்மெண்ட் ஆபீஸ் எவ்வளவு சிறப்பாக நடக்கிறது என்று புரிந்துகொள்வீர்கள். நம்மூர் பஸ், ரயில் ஓரளவுக்காவது குறித்த நேரத்துக்கு வருகிறது என்பதையும் இத்தாலியில் பயணம் செய்தால் உணர்வீர்கள். ரோட்டில் எச்சில் துப்புவதிலிருந்து, அசுத்தம் செய்வது வரை நம்மூருக்கும் இத்தாலிக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை.

இந்தியா இத்தாலியில் ரொம்பப் பிரபலம். சந்தன வீரப்பன் இறந்தது "... இந்திய ராபின் ஹுட் இறந்தார்.." என்று சில பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் பல பதிவுகள் போடவேண்டி வரும். அதனால் மீண்டும் அவற்றை ஒருநாள் எழுதுகிறேன்.
(9) Your Comments | | | |

ஐஸ் வீடும், நானும்

ஐஸ் வீட்டுக்குப் போயிருந்தேன் சில நாட்களுக்கு முன்னர். "ஐஸ் " என்று செல்லமாய் அழைக்கப்படுபவர் நமக்கு நன்றாக அறிமுகமானவர்தான். இதைக் கேட்டவுடன் ஐஸ்வர்யாராய் நினைவுக்கு வருவது நியாயமானதுதான். காதல் பட நாயகிகூட இவ்வாறு அழைக்கப்படுவதாய்க் கேள்வி.

நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை. உள்ளே வருபவர்களுக்குச் சாக்லேட் கொடுத்து உபசரித்தார்கள். ஐஸ் வீடு உள்ளே ரொம்பக் குளிராய் இருக்கும் இருக்குமென எதிர்பார்த்தால் வெளியே இருப்பதைவிட உள்ளே வெதுவெதுப்பாய்த்தான் இருந்தது. எஸ்கிமோக்கள் பனிவீடு நினைவுக்கு வந்தது. சுவரில் ஆரம்பித்துக் குளியல் தொட்டி, கட்டில் என வீட்டுக்கான பல ஐட்டங்கள் பனிக்கட்டியால் செதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. உள்ளே நுழைபவர்களிடம் வீட்டிலுள்ள எதையும் தொடவேண்டாம் என்று அறிவித்து உள்ளே அனுப்புகிறார்கள். உள்ளே போகுமளவுக்குப் பாதுகாப்பாய் இருக்குமா என்றெண்ணிக் கொண்டே உள்ளே போனோம், நல்லவேளை மேற்கூரை பனியால் செய்யப்படவில்லை. ஐஸ் வீடு பார்க்க அழகாய்த்தான் இருந்தது.

சில வரிகளைப் படித்தவுடன் உங்கள் கற்பனைக் குதிரையை வேகமாய்த் தட்டிவிட்டு யாரும் ஒரு அவசர முடிவுக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். விளம்பரத்துக்காக ஒரு நிதி நிறுவனம் இப்படிப் பனிக்கட்டியால் வீட்டைக்கட்டி பார்வைக்கு வைத்துள்ளனர். ஜெர்மனி- கொலன் நகரில் ரைஹ்ன் நதிக்கரையில் நண்பர்களுடன் உலாவிக்கொண்டிருந்தபோதுதான் தற்செயலாய் இதைப் பார்த்தோம். ஐஸ் வீடு பார்க்க அழகாய்த்தான் இருந்தது.
(15) Your Comments | | | |

Saturday, January 07, 2006

கணவரின் தம்பி=தம்பி

நாட்டுக்கு நாடு பழக்க வழக்கங்கள் எந்த அளவுக்கு மாறுகின்றன என்று நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. தெரிந்த தோழி ஒருவர் கலிங்க நாட்டைச் சேர்ந்தவர். அவர் சொன்ன பல விதயங்கள் மிக சுவாரசியமாக இருந்தன. அவற்றில் ஒன்று உறவுமுறை கொண்டாடும் விதம் மற்றும் திருமணத்துக்குப் பையன் தேடும் விதம்.

சொந்தத்தில் அங்கு யாரும் திருமணம் செய்வதில்லையாம், காரணம் மிக சுவாரசியமானது. திருமணம் முடித்தால் கணவரின் உறவுக்காரர்களை கணவர் எப்படிக்கூப்பிடுவாரோ அதேபோல்தான் மனைவிக்குமாம். கணவர் தனது அப்பாவை அப்பா என்று அழைப்பதால் மனைவியும் அவரை அப்பா என்றுதான் கூப்பிட வேண்டுமாம். மனைவியின் தம்பியை மனைவி தம்பி என்று அழைப்பதால், கணவரும் அவரை தம்பி என்றுதான் கூப்பிட வேண்டுமாம். மிக எளிய முறையாய் இருந்தாலும் இது எனக்குப் புரியவே கொஞ்ச நேரம் ஆனது. விசித்திரமாக இருக்கிறது என்று சொன்னதற்குத் தோழி சொன்னார், "..திருமணம் முடித்தபின் இருவரும் ஒருவராவதால் உறவு மட்டும் எப்படி இருவகையாக இருக்க முடியும் ..?". கேள்வி நியாயம்தான், ஆனால் எனக்குத்தான் சத்தியமாய்ப் புரியவில்லை.

இந்த உறவுமுறையில் குழப்பம் வரும் என்பதால் தூரத்து உறவினர்களுக்குக்கூடப் பெண் கொடுப்பது, எடுப்பது இல்லையாம். ஒரே வீட்டில் பெண் கொடுத்துப் பெண் எடுப்பதும் நடவாத காரியமாம். இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. திருமணத்தன்று மாப்பிள்ளை தாலி கட்டமாட்டாராம், மாலை மாற்றுவதுடன் கல்யாணம் முடிந்துவிடுமாம். நம்மூரில் வரும் முதலிரவு அங்கே நாலாம் இரவாம். அதுவரை பெண்ணும், மாப்பிள்ளையும் சந்திக்க மாட்டார்கள். நாலாம் நாள் இரவில் முதல் சம்பிரதாயம் தாலி கட்டுவதில் இருந்து ஆரம்பிக்கிறது, மற்றதெல்லாம் நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் என்ன தாலி கட்டுவதை மூன்றாம் நபர் யாரும் பக்கத்தில் இருந்து ஆசீர்வாதம் செய்ய அருகில் இருக்க மாட்டார்கள்.
அது போகட்டும், கலிங்க நாடு எது தெரியுமா?, நம்ம ஒரிசாதான்.
(8) Your Comments | | | |

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com