<$BlogRSDUrl$>

Sunday, October 16, 2005

விமானப் பணிப்பெண், வெஜ் பர்கர், நான்

இங்கிருந்து சென்னைக்கு நான் போய்வந்தது டெல்டா ஏர்லைன்ஸில். விமானப் பயணம் சவுகர்யமாகவே இருந்தது. போகும்போது அஜித் நடித்த "ஜி" படம் விமானத்தில் திரையிட்டார்கள். அறிவிப்புக்கள் தமிழிலும் சொல்லப்பட்டன. விமானப் பணிப்பெண்கள் தமிழிலும், டமிலிலும் பேசினார்கள், இரண்டுமே நன்றாக இருந்தது :).

ஒரு விஷயத்தைக் கட்டாயம் இங்கே சொல்லியே ஆக வேண்டும். அடுத்த நாட்டிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தமிழ் சகஜமாய் இருக்கும்போது, சென்னையிலிருந்து மதுரைக்குப் போகும் உள்நாட்டு விமானத்திலும் அதைவிட அதிகமாய்ப் புழக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அதில் அறிவிப்புக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டில் மட்டுமே இருந்தன. அட.. சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் போகும் மக்கள் யாரும் தமிழ்பேசுபவர்கள் இல்லையோ என்று சந்தேகம்கூட வந்தது. இத்தனைக்கும் நான் வந்த விமானம் ஜெட் ஏர்வேஸ் என்ற தனியார் விமானம்தான். இதேபோன்ற ஏர்டெகான் உள்நாட்டு விமானத்திலும் இதே கதைதான். அவர்களுக்கு இதுபற்றி ஒரு வரி எழுதிப்போடலாம் என்று நினைத்தேன், இதுவரை எழுதவில்லை.

திரும்பி வரும்போது ஒரு சுவாரசியமான சம்பவம். டெல்டா விமானத்தில் நுழையும் முன்னர் பணிப்பெண்கள் பயணிகளிடம் புதிதாய் வாங்கிய பொருட்கள் பற்றி விசாரிக்கிறார்கள்.

என்னிடம் ஒரு பணிப்பெண் வந்து ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்.

"...நீங்கள் எதில் பேசுவீர்கள், தமிழா?, ஆங்கிலமா ?"

"..இரண்டும்..", இது நான்.

"..விமானநிலையத்தில் புதிதாய் இப்போது ஏதாவது வாங்கினீர்களா ?"

"..ஆமாம்.."

".... அதை நான் பார்க்கலாமா?, அதன் விலை என்ன?", கொஞ்சம் சீரியஸாகவே கேட்டார்.

"... விலை அதிகமில்லை, ஆனால் உங்களுக்கு அதை இப்போது உங்களிடம் காட்ட முடியாது..", நானும் சீரியஸாகவே.

இவன் கொஞ்சம் பிரச்சனை செய்யும் ஆளாக இருப்பான்போல என்று அவர் யூகிப்பதைப் பார்க்க முடிந்தது. அவர் ஏதும் பிரச்சனை செய்யும் முன்னர் நாமே சொல்லிவிடுவது நல்லது என்று நான் வாங்கியதைச் சொல்லிவிட்டேன். சொல்லி முடித்ததும் டக் என்று சிரித்து, விமானத்துக்குள் அனுப்பிவிட்டார்.

அந்தச் சிரிப்பில் இவன் சரியான குறும்புக்கார ஆள்தான் என்று நினைப்பது தெளிவாய்த் தெரிந்தது. அப்படி என்னதான் வாங்கினாய் என்று கேட்கிறீர்களா?. அதுதான் தலைப்பிலேயே இருக்கிறது. தலைப்பில் முதலில் இருப்பது இல்லை :-), இரண்டாவதாக, வெஜ் பர்கர். அதுவும் சாப்பிட்டு முடித்தபின்னர் யாரிடம் மீண்டும் காட்ட முடியும் ?, நீங்களே சொல்லுங்கள்.
(15) Your Comments | | | |

Saturday, October 15, 2005

உன் ஐஸ் கிரீமாய் நானிருந்தால்...

அன்று கொஞ்சம் கவலையில் இருந்தார் அந்த நண்பர். என்னவென்று விசாரித்தேன். அவருக்குத் தெரிந்த ஒரு பெரிய மனிதர் பற்றி வருத்தத்தில் இருப்பதாய்ச் சொன்னார். நண்பர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர். கவலைக்குக் காரணம் சிரியா நாட்டின் அமைச்சராம், சிலநாட்களுக்கு முன்னால் தற்கொலை செய்து இறந்துவிட்டாராம். சரி, நண்பரின் மூடை மாற்ற எண்ணி, உங்கள் நாட்டின் மக்கள் எப்படி?, குறிப்பாய் இளைய வயது ஆண்கள், பெண்கள் எப்படி என்று கேட்டேன்.

".. எங்கள் சிரியா மக்கள் ஒன்றும் அவ்வளவு மோசமில்லை, கலகலப்பானவர்கள்தாம், பெண்களையும் சேர்த்துத்தான். ஆனால் அதற்காய் இங்கே ஜெர்மனி போல் ஒரு பெண்ணிடம் அவர் அழகைப் புகழ்ந்து அவருக்கு ஐஸ் வைப்பது சாத்திமில்லை... "

"..நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அதுபோல் அங்கே பலமுறை முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள் போலத் தெரிகிறதே..", என்றேன் சுவாரசியமாய்.

நண்பர் புன்னகையுடன் தொடர்ந்தார். ".... சில ஆண்டுகளுக்கு முன்னால் கல்லூரியில் படிக்கும்போது பலமுறை முயன்றதுண்டு. ஒரு அனுபவத்தைக் கேளுங்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் இந்த ஐஸ்கிரீமாய் நானிருந்தால் என்று சொல்லிப் புன்னகைத்தேன். நான் முழுதும் என்று சொல்லிக்கூட முடிக்கவில்லை, அந்தப் பெண் ஐஸ்கிரீமைக் கீழே வீசி "நச்" என்று நாலு மிதிவிட்டார், ஐஸ்கிரீமைத்தான். ஆளைவிட்டால் போதுமென ஓடிவந்துவிட்டேன்..., அதுசரி இந்தியாவில் எப்படி?..."

"...இந்தியாவில் பெண்கள், ஆண்கள் எல்லாரும் நல்லவர்கள்தாம். என்றாலும் இதுவரை நான் பெண்களிடம் வம்பு எதுவும் செய்ததில்லையாதலால் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று எனக்குத் தெரியாது..", என்றேன் நல்ல பிள்ளையாய் :-).
(3) Your Comments | | | |

துளசியக்கா தினமலரில்

எல்லோரும் நல்லா இருக்கீங்களா?. எழுதி சில மாதங்களாகிவிட்டது. இன்னும் கொஞ்ச நாள் போனால் எனது பிளாக்கர் பாஸ்வேர்டே மறந்தாலும் மறந்துவிடும்போலிருக்கிறது.

போனமாதம் கடைசிவரை ஊரில் இருந்தேன், சொந்த ஊரில். மூன்று வருடம் கழித்து சொந்தக் கிராமத்துக்குப் போனால் நிறைய மாற்றங்கள், குறிப்பாய் சிறுவர்களிடம். வீட்டுக்குப் போகும்போது எனது மடிக்கணினியையும் கொண்டுபோயிருந்தேன். ஆயிரக்கணக்கான புகைப்படங்களைக் கணினியில் சேமித்திருந்தேன். கொஞ்சம் ஒளித்துண்டுகளும் கூட உண்டு.

பல சிறுவர்கள் மடிக்கணினியைப் பார்த்திருக்கவே மாட்டார்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். புகைப்படங்களை மடிக்கணியிலிருந்து அவர்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கும்போது சடாரெனக் கேட்கிறார்கள், கம்ப்யூட்டர் இருக்கு, ஆனா மவுஸ் எங்கே ?. மவுஸை இங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டேன், தொடும்பலகை வைத்துச் சமாளித்துக்கொண்டிருந்தேன்.

நம்ம ஊர் வடை, இட்லி, சட்னி, சாம்பார் என ஒரு ரவுண்ட் வந்தேன். சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி என ஒன்றையும் விடாமல் தினமும் சீரியல், சினிமா என்று ஒரு மாதம் பொழுதுபோனதே தெரியவில்லை.

தமிழ் நாளிதழ்களை கடினப் பதிப்பாய்ப் படித்தேன். தினமலரில் தினமும் ஒரு தமிழ் வலைப்பூ பற்றி எழுதி வாசகர்கள் வாசிக்க வசதியாய் வலைப்பதிவின் இணைய முகவரியையும் கொடுக்கிறார்கள். ஒருநாள் தற்செயலாய்ப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, தனது வலைப்பூவுக்கு வருபவர்களை இவர் விருந்தாளியாகக் கருதுகிறார் என்று ஒரு வலைப்பதிவாளரைப் பற்றி எழுதியிருந்தார்கள். அட.. நமக்கு நன்றாய்த் தெரிந்தவர்போலத் தெரிகிறதே என்று கவனித்துப் பார்த்தால், அது நம்ம துளசியக்கா :). சில வாரங்களுக்கு முன்னால் என்றாவது ஒருநாள் துளசியக்காவின் பதிவில் ஹிட்ஸ் எகிறியிருந்தால் அது தினமலரின் உபயம்தான்.

ஜெர்மனிக்கு வந்த புதிதில் வாங்கும் ஒவ்வொரு பொருளின் விலையையும் ஐம்பதால் பெருக்கிப் பார்த்தது நன்றாய் நினைவிருக்கிறது. இப்போது கிராமத்துப் போனால் அங்கே வாங்கிய பொருட்களின் விலைகளை ஐம்பதால் வகுத்துப் பார்த்துச் சந்தோசப்படத் தோன்றுகிறது. உண்மையில் எந்த விலையும் பெரிதாய் மாறிவிடவில்லை, ஆனாலும் இப்படி ஒரு அற்பச் சந்தோசம்தான்.

உள்ளூர் விமானங்களில் பயணம் செய்வது மலிவான ஒன்றாயிருக்கிறது. சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரைக்கு டாக்ஸியில் வருவதைவிட உள்ளூர் விமானத்தில் வந்திறங்குவது மிக மலிவான ஒன்றாகிவிட்டிருப்பது
வசதியாயிருக்கிறது.

ஊருக்குப் போய்வந்ததைப் பற்றி நிறைய எழுத வேண்டும், சமயம் கிடைக்கும்போது.
(17) Your Comments | | | |

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com