Monday, July 05, 2004
விடுமுறை ..
வேலைப்பளு மற்றும் சூழ்நிலையின் காரணமாக சில மாதங்கள் முத்து வலைப்பூவுக்கு விடுமுறை விடப்படுகிறது. :)
Friday, July 02, 2004
இரத்தக் காட்டேறியும், வெள்ளைப் பூண்டும்

இன்றைக்கு நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பேச்சு பூண்டைப் பற்றித் திரும்பியது.

நண்பர் நம்ம ஊர்க்காரர் இல்லை. அவர் ஜெர்மன்காரர். பூண்டின் அசௌகரியம் அதன் மூக்கைத் துளைக்கும் நெடி மட்டும்தான். அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அதன் நன்மைகள் ஆஞ்சனேயர் வால்போல் பெரிதாய் நீண்டுகொண்டே போகும்.
அவ்வளவையும் சொல்ல முடியாதென்றாலும் சிலவற்றையாவது சொல்லியே ஆகவேண்டும். தினமும் அல்லது அடிக்கடி பூண்டு உண்பவர்களுக்கு,
1. இரத்தம் கட்டிப்படுவதை நிறுத்தி ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கிறது.
2. நோய் எதிர்ப்புத்தன்மையை அதிக அளவில் அதிகரிக்கும்.
3. பூஞ்சை, வைரஸ், பாக்டீரீயா ஆகியவற்றை எதிர்க்கும்/அழிக்கும் தன்மை கொண்டது.
4. புற்று நோய்க் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
5. காயங்களை விரைவில் குணமாக உதவும்.
6. காலரா, டைபாய்டு போன்ற கொடிய தொற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.
7. தொழுநோய்க் கிருமிகளை அழிக்கிறது.
8. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
9. இரத்தம் கட்டிப்படுவதைத் தவிர்த்து ஹார்ட் அட்டாக் வராமல் பாதுகாக்கிறது.
10. செலீனியம், ஜெர்மானியம் போன்ற தாதுக்களை உடலுக்கு அளிக்கிறது.
இன்னும் இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம். சரி. அந்தக் காலத்தில் பூண்டை எதற்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் தெரியுமா.. ?
எகிப்தியர்கள் பிரமிடைக் கட்டும்போது வேலைபார்ப்பவர்களுக்கு பூண்டை உண்ணக் கொடுத்தார்கள். அதன்மூலம் அவர்கள் உடல்நலத்துடன் நன்றாக வேலைபார்க்க முடிந்தது என பழைய எகிப்தியக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
1700 ஆம் ஆண்டுவாக்கில் பிரான்ஸில் இடுகாட்டில் குழிதோண்டுபவர்கள் தினமும் பூண்டு உண்பதை வழக்கமாக வைத்திருந்தனராம். இதனால் அவர்களுக்கு பிளேக், காலரா ஆகியவை வராமல் தடுக்கப்பட்டதாம்.
கிரேக்க நாட்டில் போர்வீரர்களும், விளையாட்டு வீரர்களும் உடல்நலம் பேண பூண்டு தினமும் உண்ணவேண்டும் என்பதை வழக்கமாக வைத்திருந்தார்களாம்.
நம்ம ஊரில் தீவிர சைவர்கள் சிலர் ( இந்தச் சைவர்கள் - சிவனை வணங்குபவர்கள் இல்லைங்க... , ஆடு, கோழி சாப்பிடாதவர்கள் ) பூண்டும் சாப்பிடுவதில்லை. இதற்குக் காரணமாய் சின்ன வயதில் கேட்ட கதை.
.... விஷ்ணு ஒரு அசுரனை அழித்தபோது ( நரகாசுரன்? ) அவன் மூளை சிதறி விழுந்து வெள்ளைப் பூண்டாக மாறியதாம், அதனால் பூண்டு அசைவ லிஸ்டில் சேர்ந்துவிட்டது...
குழந்தைகளைக் கொல்லும் பேய்களை அண்டவிடாமல் தவிர்க்க எகிப்தியர்கள் குழந்தை தூங்கும் அறையில் பூண்டை வைத்திருந்தார்கள்.
இரத்தக் காட்டேறிகளுக்கும், பேய்களுக்கும் பூண்டு வாடையே ஆகாதாம்.( அப்பாடா... தலைப்புக்குச் சம்பந்தப்படுத்திவிட்டேன் ). நம்ம ஊரில் தலையில்லா முண்டத்துக்குப் பயந்து வீட்டுக்குமுன் வேப்பிலையைக் கட்டித் தொங்கவிடுவதுபோல, ரொமானியாவில் இன்றும்கூட இரத்தக் காட்டேறிகள் வீட்டுக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காய்ப் பூண்டைத் தொங்கவிடுகிறார்கள்.
பின் குறிப்பு: தயவு செய்து யாரும் தீவிர சைவர்களையும், இரத்தக் காட்டேறிகளையும் சம்பந்தப்படுத்தி நினைத்துப் பார்க்கவேண்டாம்.