<$BlogRSDUrl$>

Wednesday, June 15, 2005

புதுப் பார்வை - தமிழ்நாடும் சினிமா மோகமும்

தமிழக மக்கள் சினிமாக்காரர்களின் மீது தீவிர மோகம் கொண்டவர்கள் என்ற ஒரு கருத்து நெடுங்காலமாய் நம்பப்பட்டுவருகிறது. அது உண்மைதானா?. சினிமாவில் பிரபலமானால் மட்டும் தமிழ்நாட்டின் முதல்வராக ஆகிவிடமுடியுமா?- இதற்குக் கொஞ்சம் ஆழ்ந்து நிதானமாய்ச் சிந்தித்துப்பார்த்தால் "இல்லை" என்பதே பொருத்தமான விடையாக வரும்.

இதைப்படித்தவுடன் இன்றைய, நேற்றைய தமிழக முதல்வர்களை எடுத்துக்காட்டாய்ச் சொல்லி இதை மறுக்கத் தோன்றலாம். ஆனால் உண்மையின் மறுபக்கத்தைத் தவறவிட்டுவிடுகிறோம். அந்த உண்மைதான் என்ன?. முன்னாள் முதல்வர்கள், இந்நாள் முதல்வர் அனைவரின் அரசியல் செல்வாக்கும் ஒரு கட்சியிடமிருந்து வந்ததேயாகும். அரசியல் செல்வாக்கு என்பதும் மக்களுக்குத் தெரிந்த பிரபலம் என்பதும் வேறு வேறு. இதைப் புரிந்துகொண்டவர்கள் மிக அதிகமானோர் அல்லர். ரஜினி எவ்வளவு பிரபலமோ அதே அளவுக்குச் செந்திலும், கவுண்டமணியும் பிரபலம். அதே அளவுக்குப் பழைய நடிகர்கள் அத்துணை பேரும் பிரபலம். ஆனால், இவர்களின் அரசியல் செல்வாக்கு என்பதற்கு இந்தப் பிரபலத் தன்மை பெரும்பாலும் உதவுவதில்லை. இதை ஏன் பெரும்பாலோர் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள்?.

எம்ஜிஆர் தமிழக மக்களிடம் புகழ்பெற்றது திரைப்படத்தால் மட்டுமே. இதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், அவர் அரசியலில் செல்வாக்குப் பெற்றது திரையால் மட்டுமே அல்ல. முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பின்புலம் மட்டுமே அவரின் அரசியல் செல்வாக்கிற்கு முதுகெலும்பாய் இருந்தது என்பதைப் பலரும் தவறவிட்டுவிடுகிறோம். ஏனென்றால் எம்ஜிஆர் என்றவுடன் நினைவுக்கு வருவது அவரின் சினிமாக்கள்தான். இதுவே உண்மையை நம்மையறியாமல் நமக்கு திரையிட்டு மறைத்துவிடுகிறது.

இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்குக் காரணம் திரைப்படங்கள்தாம். ஆனால் அவரின் அரசியல் செல்வாக்கு எம்ஜிஆர் என்ற முன்னாள் முதல்வரின் செல்வாக்கிலிருந்து வந்ததேயாம். சந்தேகமிருப்பவர்கள் ஜெயலிதா சந்தித்த முதல் தேர்தலை நினைத்துப்பாருங்கள். அதில் ஏன் அவரால் வெற்றி பெறமுடியவில்லை?. ஏனென்றால் எம்ஜிஆரின் அரசியல் பின்புலம் அன்று இரண்டாய்ப் பிரிந்திருந்தது, அதுவே தோல்விக்குக் காரணம். ஆனால், ஜெயலலிதாவின் அடுத்த தேர்தல் வெற்றிக்கு அவருக்குக் கிடைத்த எம்ஜிஆரின் இரட்டை இலையும், அதிமுக என்ற எம்ஜிஆரின் கட்சிப் பெயரும்தான் அடிப்படை. இன்று அவர் அரசியலில் ஆழ வேருன்றியதால் அவருக்கு எம்ஜிஆரின் பெயர் தேவையில்லை. ஆனாலும் இந்த அதிமுக என்ற பெயரும், இரட்டை இலை என்ற சின்னமும் மிக முக்கியம்.

இதே ஜெயலிதா அதிமுக என்ற பெயரில்லாமல், எம்ஜிஆர் என்ற பின்புலமில்லாமல் தனிக்கட்சி ஆரம்பித்திருந்தால் அவரின் நிலை என்னவாயிருக்கும்?. சந்தேகமே வேண்டாம். மற்ற நடிகர்களுக்கு ஏற்பட்ட கதிதான். அவரின் அரசியல் வெற்றிக்குச் சினிமா காரணமில்லை, எம்ஜிஆரின் பின்புலம்தான் காரணம் என்பது இப்போது நன்றாகவே விளங்கும்.

சரியான அரசியல் பின்புலமில்லாமல் சினிமாப் பிரபலத்தனமை மட்டுமே போதுமென நினைத்து அரசியலில் இறங்கிய யாரும் தமிழகத்தில் வெற்றி பெற்றதே இல்லை. ஏனென்றால் சினிமாப் பிரபலத் தன்மை என்பது வேறு, அரசியல் செல்வாக்கு என்பது வேறு. இதை மறந்தோரின் கதி கதோகதிதான். அவ்வாறு இறங்கிப் பட்டவர்கள் பலர் தமிழ்நாட்டில் உண்டுதானே?.

எம்ஜிஆர் அளவுக்கு திரையில் பிரபலமான சிவாஜி கணேசன்( இன்னும் சொல்லப்போனால் எம்ஜிஆரை விட இவருக்குப் பல மட்டத்தில் சினிமா ரசிகர்கள் அதிகம்), பிரபல கதாநாயகர்களான ராஜேந்தர், பாக்யராஜ் இன்னும் பலர் ஏன் வெற்றி பெற முடியவில்லை?. காரணம் அவர்கள் திரையால் வந்த பிரபலத் தன்மை போதுமென நம்பிக் காலைவைத்தார்கள். இத்தனைக்கும் இவர்களில் சிவாஜி காங்கிரஸ் கட்சியின் அரசியல் பின்புலத்தைக் கொஞ்சம் கொண்டிருந்தார். தமிழகத்தில் காங்கிஸுக்கு எந்த அளவுக்குச் செல்வாக்கு இருந்ததோ அதில் ஒரு பகுதி மட்டுமே அவருக்கு அரசியலில் கிடைத்தது. அதைவிட அதிகமாய் அவருக்குக் கிடைக்கவில்லை.

இந்தியாவிலேயே தனது சினிமாப் பிரபலத்தன்மையை மட்டும் வைத்து அரசியல் செல்வாக்குப் பெற்றவர் ஒரே ஒருவர்தான். அவர்தான் ஆந்திர முன்னாள் முதல்வர் என்டிஆர். அவர் சினிமா நடிகர் என்ற நிலையைவிட்டு மேலேற்றப்பட்டுக் கடவுளாகவே வணங்கப்பட்டவர், அது ஒரு காலம் :-). அவருக்குப் பின்னால் வந்த சந்திரபாபு நாயுடுவின் வெற்றிக்குக் காரணம் என்டிஆரின் பின்புலம்தான் என்று சொல்லத் தேவையில்லை. இந்த ஒரு உதாரணத்தைத் தவிர்த்துத் தமிழ்நாடு உள்ளிட்ட வேறு எந்த மாநிலத்திலும் சினிமாவை மட்டும் வைத்து இதுவரை யாரும் வந்ததில்லை. இனிமேலும் யாராவது வரமுடியுமா என்பதும் சந்தேகமே.

கலைஞர் கருணாநிதியை எடுத்துக்கொண்டால், அவர் இன்றுவரை எந்தத் தேர்தலிலும் அவரின் தொகுதியில் தோற்றதில்லை. காரணம், அவரின் பலமான அரசியல் பின்புலம் மட்டுமே. வைகோ சினிமாவில் இல்லாவிட்டாலும் அவரால் பல தொகுதிகளில் வெற்றிபெற இயலுவது அவரின் அவரின் அரசியல் பின்புலத்தால்தான்.

சினிமாப் பிரபலம் என்ற மாயையை நம்பி அரசியலில் இறங்கும் நடிகர் யாராயிருந்தாலும் தமிழகத்தில் அரசியலில் வெற்றி பெறுதல் என்பது குதிரைக் கொம்பே. இதுவே வரலாறு சொல்லும் உண்மை. வரலாறு சொல்லும் உண்மைகளை, அந்தத் தவறுகளை மறந்தவர்கள் மீண்டும் தானே அத்தவறுகளைச் செய்யச் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்.
| | |
Comments:
வித்தியாசமான அணுகுமுறை...

ஆனால் சூப்பர்ஸ்டாரை கவுண்டமணியுடன் ஒப்பிட்டது கொஞ்சம் ஓவர்.

இந்தியாவெங்கும் சினிமாவில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே தமிழகத்தில் அரசமைக்க முடியும் என்ற தவறான கருத்து நிலவுகிறது.

எம்.ஜி.ஆரும் திராவிட இயக்கமும் ஒரு symbiotic relationship-ஐ கொண்டிருந்தனர். ரஜினிகாந்த் இது தெரிந்து தான் அரசியலலிருந்து விலகி இருக்கிறாரோ என்ற சந்தேகம் எனக்கு நெடுநாளாய் உண்டு.

இந்த theory-க்கு அக்னி பரிட்சை: விஜயகாந்த் வரும் சட்டசபைத் தேர்தலிற்கு பிறகு எப்படி வெளிப்படுகிறார் என்பதே...
 

///ஆனால் சூப்பர்ஸ்டாரை கவுண்டமணியுடன் ஒப்பிட்டது கொஞ்சம் ஓவர்.///
நன்றி ராமநாதன். நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. சினிமாவினால் வரும் பிரபலத் தன்மையைச் சொல்லவே இவ்வாறு இணை வைத்தேன். செந்தில்-கவுண்டமணியின் பிரபலத்தன்மைக்கும் ரஜினியின் பிரபலத் தன்மைக்கும் ஒரு மாயத்தன்மை மிக்க வேறுபாடு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை :-).
 

முத்து., நானும் இதையொட்டி இப்பத்தான் சிறிது நேரத்துக்கு முன்பு பதிவிட்டேன். பதிவின் பெயர் 'ரஜினியின் குறும்பு'.

//கலைஞர் கருணாநிதியை எடுத்துக்கொண்டால், அவர் இன்றுவரை எந்தத் தேர்தலிலும் அவரின் தொகுதியில் தோற்றதில்லை. காரணம், அவரின் பலமான அரசியல் பின்புலம் மட்டுமே.//

வெரும் அரசியல் பின்புலம்தான் காரணமென்றால்., அண்ணா, காமரசர் எல்லாம் கூட தோற்று இருக்கிறார்களே?. தொகுதி மக்களின் அன்பும்தான் காரணம்., குதிக்கரவங்க சீக்கிரம் குதிங்க!!
 

நன்றி அப்படிப்போடு. உங்கள் பதிவைப் படித்த பின்னர்தான் உங்களின் இப்பின்னூட்டத்தைப் பார்க்கிறேன்.
 

நம்பி,
சரிதான். நடிகர் நடிகருடன்தான் இணைவைத்துப் பார்க்கப்படுவார். உங்கள் கருத்துக்கு நன்றி.
 

//இந்தியாவிலேயே தனது சினிமாப் பிரபலத்தன்மையை மட்டும் வைத்து அரசியல் செல்வாக்குப் பெற்றவர் ஒரே ஒருவர்தான். அவர்தான் ஆந்திர முன்னாள் முதல்வர் என்டிஆர்.//

முத்து,
இது ஓரளவு தான் உண்மை. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதிலிருந்து என்.டி.ஆர் புரட்சி வரை ஆந்திரத்தில் காங்கிரஸ் தனிக்காட்டு ராஜா. சொல்லிக்கொள்ளும்படி எதிர்க்கட்சி இல்லை.கம்யூனிஸ்ட் கட்சி தெலுங்கானா பகுதியில் ஓரளவு பிரபலமாக இருந்தாலும் ஆட்சிபிடிக்கும் அளவிற்கு இல்லை. நீலம் சஞ்சீவ ரெட்டியைத் தவிர மற்ற எல்லா காங்கிரஸ் பெருந்தலைகளும் இந்திரா காங்கிரசில். இருந்தாலும் அவர்களுக்கென்று அதிகாரம் இல்லை. அவர்கள் காவடித் தூக்குவது டெல்லிக்கு. என்.டி.ஆர். அரசியலில் குதிக்க யோசித்துக்கொண்டிருந்த சமயம் ஒரே ஆண்டில் மூன்று முதல்வர்கள் மாற்றப்பட்டார்கள். காங்கிரசுக்கு புதிதாக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட ராஜீவ் காந்தி ஹைதராபாத் விமான நிலையத்தில் அப்போதைய முதல்வர் அஞ்சையாவை பலர் முன்னிலையில் அவமானப்படுத்தினார். இது தெலுங்கர்களின் சுயமரியாதைக்கு ஏற்பட்ட சவாலாக 'தெலுகு ஆத்மகௌரவம்' என்ற கோஷத்தை முன்வைத்து ஏற்கனவே காங்கிரஸ் மீதிருந்த அதிருப்தியையும், தனது சினிமாப் பிரபலத்தையும் நம்பி என்.டி.ஆர். களமிறங்கினார். மீதி அனைவருக்கும் தெரிந்த வரலாறு.

அடிப்படைக்காரணம் காங்கிரசுக்கு ஒரு மாற்று தேவையாக இருந்தது. அந்த மாற்றுக்கு என்.டி.ஆரின். பிரபலம் கைகொடுத்தது. வேறொருவருக்கு பல ஆண்டுகள் எடுத்திருக்கக்கூடிய வெற்றி அவருக்கு உடனடியாகக் கிடைத்தது.
 

ராமாராவ் பற்றி சுந்தரமூர்த்தி எழுதிய கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன்.

சினிமா பிரபல்யத்தை தவிர மக்கள் தொடர்பும் அரசியலின் வெற்றிக்கு அவசியமான ஒன்று. ராமாராவ் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்தார். வேட்பாளர் பட்டியலை தேர்தலுக்கு பல மாதங்கள் முன்பாகவே அறிவித்து ஆதரவு திரட்டினார்.

அரசியலில் வெற்றிபெற இத்தகைய திட்டமிடலும், கடின உழைப்பும், மக்கள் தொடர்பும் அவசியம்.

விஜயகாந்த் இதை உணர்ந்து அரசியல் நடத்துவது போலத்தான் எனக்கு தோன்றுகிறது.

அன்புடன்

ராஜ்குமார்
 

//ரஜினி எவ்வளவு பிரபலமோ அதே அளவுக்குச் செந்திலும், கவுண்டமணியும் பிரபலம்.//
முத்து - ரொம்ப தான் குசும்பு போங்க !! :)
இதே மாதிரி ஒரு கருத்தை தான் என்னுடைய "பாவம் , அவரை விட்டுவிடுவோம்" பதிவுல சொன்னேன்..ரசிகர்கள் டென்சனாயிட்டாங்க... எப்படி நீ தலைவர கவுன்டமனி செந்தில் பாக்யராஜ் கூட கம்பேர் பன்னாலாம்னு
///சினிமாவை மட்டும் வைத்து இதுவரை யாரும் வந்ததில்லை. இனிமேலும் யாராவது வரமுடியுமா என்பதும் சந்தேகமே
///
மிகச் சரியாக சொன்னீர்கள் முத்து...நல்ல பதிவு !
வீ எம்
 

நல்லதொரு அலசல்.... நன்றாக உள்ளது உங்கள் பதிவுகளேல்லாம்
 

எம்ஜியாரின் சினிமா பின்புலம் (பின்பலம் என்றும் சொல்லலாம்) தன் படங்களின் மூலம் தன்னைப்பற்றி அவர் உருவாக்கிய பிம்பம்தான். ஏழைப்பங்காளன், நீதிக்காவலன் மற்றும்; நேர்மையும் ஒழுக்கமும் பாசப்பிணைப்புமுள்ள இளைஞன். அதோடு தனது தனிவாழ்வைப்பற்றியும் விமர்சனங்களும் அதிருப்தியும் (சாமானியரிடையே) எழாமல் பார்த்துக்கொண்டார். எனவேதான் திரை எம்ஜியாரையும் நிஜ எம்ஜியாரையும் மக்கள் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. இதுவே அவரது அரசியல் வெற்றிக்கு பின்புலமாய் அமைந்தது.

அவருக்குப்பின் எந்த நடிகரும் (சிவாஜி உட்பட) அத்தகைய பிம்பத்தை ஏற்படுத்தவில்லை.

ரஜினியைப்பற்றிய பிம்பங்கள் அவரின் தயவு தேவைப்பட்ட திரைத்துறையினர்,அவருக்கு ஆதரவான பத்திரிக்கைகள், தலைகால் புரியாத அவரின் ரசிகர்களில் மிகக்குறைந்த பகுதியினர் மற்றும் அவரின் நிச்சயமில்லாத அரசியல் செல்வாக்கில் ஆதாயம் தேட முனைந்த அரசியல்வாதிகள் ஆகியோரின் பிரச்சாரமே.

எம்ஜியரின் கால்நூற்றாண்டுகால படங்களே அவரின் பிரச்சாரம். ஆனால் இதையெல்லாம் எம்ஜியார் எதிர்கால அரசியலை உத்தேசித்து திட்டமிட்டாரா என்பதுதான் வியக்கவைக்கும் கேள்வி.
 

முத்து,
நானும் இதே ரீதியான கருத்தக்களைத்தான் கொண்டிருந்தேன். என் எண்ணங்களை எழுத்தில் பார்ப்பது போல உணர்ந்தேன். ஆனால், விஜயகாந்த் மற்ற நடிகர்களைப் போல இல்லாமல் ஒரு தேர்ந்த அரசியல்வியாதியை போல செயல்படுவதாக நினைக்கிறேன். கட்சி தொடங்கும் முன்னரே கோஷ்டி மோதல் தொடங்கி விட்டது பாருங்கள் ;-) ->
http://thatstamil.indiainfo.com/specials/cinema/news/vijaykanth12.html
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com